ஒருபக்கம் ஒழுக்கம், கற்பு, பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் என்று பாடம் எடுக்கிறோம். மறுபக்கம் தினசரி செய்தித்தாள்களில்
குழந்தைகளையும் வன்புணர்வு செய்கிறார்கள். பெண்களை மானபங்கப்பபடுத்தி தீயிட்டு கொளுத்திவிடுகிறார்கள். எய்ட்ஸ் நோயில் இந்தியா தான் முதலிடம். இவை கூறும் செய்தி தான் என்ன? நம் குழந்தைகளுக்கு பாலுறவு சார்ந்த கல்வியை நாம் முறையாக பயிற்றுவிப்பதில்லை. நமது உடலில் ஜீரண மண்டலம் இருக்கிறது. சுவாச மண்டலம் இருக்கிறது. நரம்பு மண்டலம் இருக்கிறது. எலும்புகளும் தசைகளும் இணைந்து நம் உடலை இன்னதென்று கண்டுகொள்ளுமாறு நிற்கச்செய்கிறது. ஆனால்
இந்த இனப்பெருக்க உறுப்புகள் எதற்காக இருக்கின்றன? என்ற கேள்வி வளரும் ஒவ்வொரு வளர்இளம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இல்லாமல் இல்லை.
எனக்கு பதினொன்றாம் பனிரெண்டாம் வகுப்பு எடுத்த ஆசிரியர் விலங்கியலில் வந்த இந்த பாடங்களை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று ஸ்கிப் செய்து விட்டார். சமூகத்தில் ஒரே ஒருவரிடம் இருந்து கூட இது குறித்த சரியான பார்வை தருமாறு ஒரு கட்டுரையையோ ஒரு பேச்சையோ நான் கேட்டு வளர்ந்ததில்லை.
ஒரு பெண் பூப்பெய்துவாள். மாதம் மாதம் மாதவிடாய் காண்பாள். ஆனால் ஏன் அவளுக்கு மாதவிடாய் வருகிறது என்று கேட்டால் தெரியாது. மேலும் மாதவிடாய் காலத்தில் தன் நலன் எப்படி பேசுவது என்று தெரியாமல் 90% தமிழக வளர்இளம் பெண்கள் இருக்கிறார்கள் என்று கேள்விப்படும் போது நாம் இன்னும் எத்தனை பின் தங்கியிருக்கிறோம் என்பது தெளிவாகிறது.
வளர்இளம் பருவத்தில் பல கனவுகள் பூக்கும். புலரா வானில் பல வண்ணங்களை தீட்டும் கதிரவனைப்போல மலரா வயதில் பல எண்ணங்களை தீட்டும் மனது. கிட்டத்தட்ட அதே நேரத்தில் தான் தங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை நல்லமுறையில் கடந்து வரும் நிகழ்வுகளும் நடக்கும்.
ஒரு குழந்தை பிறந்த மூன்று வயது வரை தன் பாலினம் அறியாது. பிறகு தன் பாலின வேறுபாட்டை உணர ஆரம்பிக்கும். தனக்கு இருப்பது போல் அடுத்த பாலினத்திடம் இல்லை என்பதையும் அடுத்த பாலினத்தில் இல்லாதது நமக்கு இருக்கிறது என்றும் சமூகம் அதற்கு முறையாக கற்றுக்கொடுப்பதற்கு முன்னமே சினிமா மூலமும் அதில் காட்டப்படும் அதீத மசாலா பூசப்பட்ட காட்சிகள் மூலமும் ஓ.. எதிர் பாலினம் என்றால் இப்படித்தான் போல..
சினிமா ஹீரோயின் போல கொஞ்சம் அரை லூசாக இருந்தா தான் பசங்களுக்கு புடிக்கும் போல.. சைஸ் ஜீரோ தான் நல்லது போல.. இந்த க்ரீம் தடவுனா தான் கொஞ்சம் அழகா இருக்கும் போல.. என்று வளர்இளம் பெண்கள் நினைப்பார்கள்.
வளர் இளம் பையன்களும் மீசை அரும்பாத வயதில் கூட தங்களை பெண்களிடம் எப்படி அழகாக முன்னிறுத்துவது என்று சிந்திப்பார்கள். இயற்கையாக ஹார்மோன் மாற்றங்களால் பரு வந்தால்.. அதைக்கூட சில பெண்கள் தங்களை பார்ப்பதால் தான் வருகிறது என்று எண்ணி மகிழ்ச்சி அடைவார்கள்.
கழுத்துக்கும் தொண்டைக்கும் இடையே உருவமில்லா ஏதோ ஒரு உருண்டை உருள்வது போல உணர்வார்கள். ஒரு சக வயது பெண் பார்த்து சிரித்தால் உலகை மறப்பார்கள், பேசிவிட்டாலோ ஊன் உறக்கம் துறப்பார்கள், சிறகுகள் கூட்டி வானில் பறப்பார்கள், உண்மையில் வளர்இளம் பெண்கள் தாங்கள் பூப்பெய்தும் வரை பெண்ணுறுப்பு குறித்து அறிவதில்லை. அறிந்து கொள்ளவும் முடியாது. சொல்லித்தர ஆள் இல்லை என்பதே முக்கியமான விசயம் இங்கு.
ஏன் காயமே ஏற்படாமல் உதிரம் வருகிறது? காரணமே இன்றி மார்பகம் வளர்கிறது? சுருக்கமே இல்லாத முகத்தில் ஏன் பருக்கள் வருகின்றன? இதுவரை நண்பனாக இருந்தவனிடம் இருந்து தாய் தூரமாக இருக்க சொல்கிறாளே? தந்தை அருகிலே படுத்த என்னை ஏன் திடீரென தாய் தன் அருகில் படுக்க கட்டளையிடுகிறாள்? சக தோழிகளுக்கும் இதே உணர்வு வருகிறதா? இந்த வழியாக தான் குழந்தை வருமா? அத்தனை பெரிய தலை எப்படி இந்த சிறிய ஓட்டை வழியாக வரும்? இறைவா.. என்னை ஏன் பெண்ணாக படைத்தாய்? இப்படி பல கேள்விகள் எழும்.
பெண்களுக்காவது பூப்பெய்திய நாளில் இருந்து தாய் தனக்கு தெரிந்ததை கூறிவருவார். அது சரியா தவறா விடுங்கள். ஒரு ப்ரைமரி செக்ஸ் கல்வி அங்கு தாயிடம் இருந்து கிடைக்கும்.
ஆனால் வளர் இளம் ஆண்களுக்கோ அது கூட இல்லை. நேற்று வரை சுருங்கிக்கிடந்த உறுப்பு ஏன் திடீரென இத்தனை வேகமாக வளர்கிறது.? ஏன் மீசை முளைக்கிறது? ஏன் சக பெண் தோழிகளை பார்க்கும் போது திடீரென்று ஆசை துளிர்க்கிறது? ஏன் விடியா காலையில் குறியில் இருந்து வெண்ணிற நீர் வடிகிறது? இது நோயா எனக்கு மட்டும் தான் இப்படி நடக்கிறதா? சக நண்பர்களுக்கும் நடக்கிறதா? இதில் எந்த கேள்விக்கும் ஆண்களுக்கு விடையே கிடைக்காது. தங்களுக்குள்ளேயே ஃபேண்டசைஸ் செய்வார்கள்.
அதனால் ஒரு தியரி உருவாகும். அது சரியா பொய்யோ நம்புவார்கள். இப்படியாக ஒரு மாய உலகில் வாழ்வார்கள். பசி தாகம் போன்று பாலுறவும் முக்கிய தேவைகளில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. உணவு பற்றி பேசுகிறோம். ஆனால் பாலுறவு பற்றி பேசுவதே இல்லை. இனி பேச வேண்டும்.
பெண் பூப்பெய்துதல் - மாதவிடாய் - மருத்துவ அறிவியல்
மாதவிடாய் சுழற்சியின் உடல்இயங்குவியல் ரகசியத்தை அறிந்தால் மாதவிடாய் என்பதை தீட்டென்றோ ஒதுக்கி வைக்க வேண்டிய ஒன்றென்றோ யாரும் நினைக்க வாய்ப்பில்லை.
மாதவிடாய் ஏன் மாதம் மாதம் வருகிறது? மனிதிகளுக்கு மட்டும் தான் இந்த மாதவிடாய் நடக்கிறதா? இல்லை. சிம்பன்சி குரங்குகள், மனித குரங்குகளுக்கும் , சில வகை வௌவால் இனத்திற்கும் மாதவிடாய் நிகழ்கிறது.
மாதவிடாய் என்பது ஒரு அருட்கொடை. அதன் உள்ளார்ந்த ரகசியங்கள் நமது படைப்பின் அழகை வெளிப்படுத்தும் வகையில் இருக்கிறது.
ஒரு சிறுமி தனது பருவ வயதை எட்டுகையில் பூப்படைகிறாள். இது 12 முதல் 15 வயது வரை நிகழலாம். இதை "மெனார்க்கி" (Menarche) என்று கூறுவோம்.
அதாவது பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து முதன்முதலாக ரத்தம் உள்ளிட்ட மாதவிடாய் கழிவுகள் வெளியேறும் நிகழ்வை பூப்பெய்துதல் (Menarche) என்று கூறுகிறோம்.
ஆயினும் பூப்பெய்துதல் நிகழ்வு என்பது மூன்று காலங்களாகப் பதுக்கப்படுகிறது. முதலில் தீலார்க் (Thelarche), பெண்ணின் மார்புப் பகுதியில் காம்புகள் (Breast buds) அரும்பத் தொடங்கும். இது எட்டு முதல் ஒன்பது வயது தொட்டு தொடங்க ஆரம்பிக்கும்
அதற்குப் பிறகு அட்ரினல் சுரப்பிகளின் ஆண்ட்ரோஜென் விளைவாக, பிறப்புறுப்புக்கு மேல் உள்ள பகுதியில் ரோமங்கள் வளர ஆரம்பிக்கும் இதை ப்யூபார்க் (Pubarche) என்கிறோம்.
தீலார்க் தொடங்கியதில் இருந்து 2 முதல் 2 ½ வருடங்களிலும் ப்யூபார்க் தொடங்கியதில் இருந்து 6 மாதங்களில் இருந்து ஒரு வருடத்திற்குள் மெனார்கி நிகழ்வது இயல்பானது.
அன்றிலிருந்து பிரதி மாதம் மாதவிடாய் நிகழ ஆரம்பிக்கும். எதற்கு இந்த மாதவிடாய்? ஒரு பெண் இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டதை உணர்த்தும் முதல் சமிக்ஞை செய்தியே பூப்பெய்துதல் ஆகும்.
நிற்க... முதல் சமிக்ஞை கிடைத்துவிட்டதாலேயே அவள் உண்மையில் இனப்பெருக்கத்துக்கு தயாராகி விட்டாள் என்று அர்த்தமில்லை. அவளது உடலும் மனமும், கர்ப்பம் எனும் நிலையை அடைவதற்கு முன் இன்னும் பல கட்ட முதிர்ச்சியை அடைய வேண்டியுள்ளது.
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு முறை நிகழும் இந்த நிகழ்வு பூப்பெய்துதல் நிகழ்வில் இருந்து மெனொபாஸ் எனும் மாதவிடாய் நிறுத்த நிகழ்வில் முடிவடையும்.
தோராயமாக 15 வயதில் ஆரம்பித்து சுமார் 45 வயதில் முடியும் இந்தத் தொடர் நிகழ்வு. ஒரு பெண்ணுக்கு வருடத்திற்கு 12 முறை என 30 வருடங்களுக்கு 360 முறை நிகழும் சங்கிலத் தொடர் அவளது வாழ்வில் மிக இன்றியமையாத விசயம். அதை ஒட்டியே இவ்வுலகில் நாம் நிலைத்திருப்பது நிகழ்கிறது.
14- 15 வயது என்று பூப்பெய்துதல் வயதைக் கூறினாலும் அது அனைவருக்கும் ஒன்று போல இருப்பதில்லை. இருக்கவும் வேண்டியதில்லை.
எட்டு வயது முதல் பதினான்கு வயது நிறைவுக்குள் தீலார்க்-> ப்யூபார்க்-> மெனார்கி நிகழலாம். 13 வயது தாண்டியும் தீலார்க் நிலை வரவில்லை என்றால் மருத்துவரை அணுகுவது நல்லது.
பூப்பெய்துதல் விஷயத்தை பெரிய அச்சமிகு ஒன்றாக நோக்க வேண்டியதில்லை. என் மகள் எப்போ வயசுக்கு வருவா? என்று வயிற்றில் நெருப்பை வைத்துக் கொண்டு இருக்கிறேன் என்று தாய்மார்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.
அப்படியெல்லாம் அச்சம் கொள்ளும் விஷயமா பூப்பெய்துதல்? இல்லவே இல்லை. தமிழ்நாடு போன்ற பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்ட மாநிலங்களில் நல்ல சத்துள்ள உணவு உண்பதால் சில மாதங்கள் முன்கூட்டி பூப்பெய்துதல் என்பது இயல்பானதாகும்.
தமிழ்நாட்டை விட பிஹார் ராஜஸ்தான் மத்திய பிரதேசத்தில் பூப்பெய்தும் சராசரி வயது அதிகம். அதற்குக் காரணம் பொருளாதாரம் தான். எனவே, பூப்பெய்திய மகளை அது ஒரு அசாதாரண நிகழ்வு போல அச்சம் கொண்டு ஏதுமறியாத சிறுமியை பீதியேற்றக் கூடாது.
முன்னர், பூப்பெய்துதலை விழா எடுத்துக் கொண்டாடும் வழக்கமும் நம்மிடம் இருந்து வந்தது. முந்தைய காலத்தில் பூப்பெய்துதலை ஒட்டி பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வந்தது.
அதனால் ஒரு பெண் பூப்பெய்து விட்டாள் என்பதைச் சமூகத்துக்கு தெரிவிக்கும் முகமாக அத்தகைய நிகழ்வுகள் நடைபெற்று வந்திருக்கலாம். தற்போது பெண்ணிற்கு திருமணத்திற்கு முன்பு பள்ளிக் கல்வி > உயர் கல்வி > வேலை வாய்ப்பு ஆகியன இன்றியமையாததாகி இருக்கிறது.
எனவே தற்கால சூழ்நிலையில், பூப்பெய்துதல் நிகழ்வு என்பதை உடல் இயங்கியலில் இயல்பான நிகழ்வாக எடுத்துக் கொள்ளும் போக்கு நமது சமூகத்தில் அதிகரித்து வருகிறது. எனினும் ஆங்காங்கே சமூக அழுத்தங்களால் பூப்பெய்துதலை விழா எடுக்கும் நிகழ்வும் நடந்து வருகிறது.
சரி.. மாதவிடாய் நிகழ்வுக்கு கருமுட்டை தான் ஹுரோயின். ஒரு கருமுட்டையின் இந்த பயணம் தான் மாதவிடாய் சுழற்சி. ஒரு பெண் சிசு தனது தாயின் கருவறைக்குள் இருந்து பிறக்கையில், பத்து முதல் இருபது லட்சம் முட்டைகளைக் கொண்டிருக்கலாம்.
அதாவது ஒரு பெண் சிசு தாயின் கர்ப்ப பைக்குள் இருக்கும் போதே தனது குழந்தையாகப் போகும் கருமுட்டையையும் சேர்த்தே தன்னகத்தே வைத்திருக்கிறது என்றால் என்னே ஒரு ஆச்சரியம்.
அவள் பிறந்த தேதியில் இருந்து பூப்பெய்த ( மெனார்கி) இருக்கும் தேதி வரை இயற்கையின் நியதிப்படி, சக்தியற்ற தெம்பற்ற முட்டைகள் யாவும் அழிக்கப்பட்டு அவள் பூப்பெய்தும் போதோ நாற்பதாயிரத்துக்கும் குறைவான முட்டைகளே அவளது ஒட்டுமொத்த இனப்பெருக்க காலத்திற்கும் எஞ்சி இருக்கும்.
பிரதி மாதம் மாதவிடாய் நிகழ்கையில் ஆயிரமாயிரம் முட்டைகளுக்குள் போட்டி வைக்கப்பட்டு வலிமை வாய்ந்த ஒரே ஒரு முட்டை மட்டுமே சினைப்பையில் இருந்து வெளிவரும்.
ஆக, 20 லட்சம் முட்டைகளில் இருந்து 360 முட்டைகளை நமது உடல் தேர்ந்தெடுக்கிறது எனில், நமது படைப்பை நினைத்து ஒவ்வொரு நொடியும் சிலாகிக்க வேண்டும்.
மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் சினைப்பையிலும்(Ovary) கர்ப்ப பையிலும் (Uterus) நிகழும் சீரான மாற்றங்களை உள்ளடக்கியது. ஒரு பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளானது
இரு சினைப்பைகள்(Ovary), இரு சினைக்குழாய்கள்(Fallopian Tubes), கர்ப்ப பை(Uterus) மற்றும் பிறப்புறுப்பு/யோனி/ஜனனக்குழாய் (Vagina) இவற்றை உள்ளடக்கியது.
இதில் சினைப்பையில் தான் அவளது சினைமுட்டைகள் பாதுகாப்பாக இருக்கின்றன. ஒரு மாதவிடாய் சுழற்சியில் சினைப்பையில் நிகழும் மாற்றங்களை காண்போம்.
ஈஸ்ட்ரோஜென் எனும் பெண் ஹார்மோனின் தூண்டுதலால் நமது சினைப்பையில் பல முட்டைகள் ஒரே நேரத்தில் வளர்ச்சி காண ஆரம்பிக்கும். அந்த முட்டை அடங்கிய தொகுப்பை Graafian follicle என்போம்.
இந்த முட்டை வளர்ச்சிக்கு தொடர்ந்து அவளது மூளையின் பிட்சூடரி எனும் சுரப்பியில் இருந்து சுரக்கும் Follicular Stimulating Hormone எனும் ஹார்மோனின் தூண்டுதல் தேவை.
நன்கு முட்டை வளர்ந்ததும் மூளையில் இருந்து லூடினைசிங் ஹார்மோன்(Luteinizing Hormone) சுரக்கும். அந்த ஹார்மோன் ரத்தத்தில் கலந்து உச்ச நிலையில் இருக்கும் 24 இல் இருந்து 36 மணி நேரத்தில், ஒரு முட்டை சினைப்பையில் இருந்து வெளியேறும்.
முட்டையை வெளியேற்றியவுடன் சினைப்பையில் இருக்கும் க்ராஃபியன் ஃபாலிகிள் - கார்பஸ் லூடியம் (Corpus Luteum) எனும் பகுதியாக மாறும். வெளியேறிய முட்டை சினைக்குழாயில் (Fallopian tube) வந்து 24 முதல் 36 மணி நேரம் காத்திருக்கும்.
யாருக்காக இந்த காத்திருப்பு? தன்னை சந்தித்து முழுமை படுத்த விந்தணுவில் ஏதேனும் ஒன்றாவது வந்து விடாதா என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் நமது கதாநாயகியான கருமுட்டை.
க்ளைமேக்ஸ் ஒன்று: தன்னை சந்திக்க கோடிக்கணக்கான விந்தணுக்களில் ஒன்று வந்தவுடன் அதனுடன் இரண்டறக்கலந்து கருமுட்டையாக மாறிவிடும். இது சுபமான முடிவு.
முட்டையை வெளியேற்றியவுடன் மீதம் இருந்த கார்பஸ் லூடியம் " ப்ரொஜஸ்டிரான் "Progesterone" எனும் ஹார்மோனை சுரக்கும். இந்த ஹார்மோன் தான் அவளது கருப்பையை கர்ப்பத்திற்கு ஏற்றாற் போல் தயார் செய்யும்.
கருப்பைக்கு தேவையான ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி கர்ப்ப பையை மெத்தைப் போல ஆக்கும். அந்த மெத்தையில் நமது கருமுட்டை சென்று ஒட்டிக்கொண்டு கருவாக வளர்ந்து குழந்தையாக உருமாறுகிறது.
க்ளைமேக்ஸ் இரண்டு: தன்னை வந்து சேர கதாநாயகனான விந்தணு கண்ணுக்கெட்டிய தூரம் வராததை அறிந்த முட்டை.. பசலை நோய் கொண்டு உண்ணாமல் உறங்காமல் 24 முதல் 36 மணிநேரத்தில் மரணித்து விடும்.
அந்த முட்டை இறந்த செய்தி கேட்டதும் சினைப்பையில் இருந்த கார்பஸ் லூடியம் - ப்ரோஜெஸ்டிரான் சுரப்பதை நிறுத்தி விட்டு, தானும் அழிந்து விடும்.
ப்ரோஜெஸ்டிரான் இல்லாத கர்ப்ப பை மழையில்லாத கழனி போல பசுமை இழந்து வரண்டு விடும். சிறிது நாட்களில் இந்த கர்ப்ப பை கழிவுகள் அனைத்தும் வெளியேறி கர்ப்ப பை மற்றொரு மாதவிடாய் சுழற்சிக்கு தயாராகி விடும். இந்த கழிவு வெளியேற்றத்தை பீரியட்ஸ்/மென்சஸ் என்று அழைக்கிறோம்.
மாதவிடாய் சுழற்சியை உன்னிப்பாக கவனித்தால் இந்தத் தொடர் நிகழ முக்கியமான தேவை ஹார்மோன்கள் தான். ஈஸ்ட்ரோஜென் , FSH , LH போன்ற ஹார்மோன்கள் சரிவிகிதத்தில் டைம் செட் செய்து வைத்தார் போல் ஏறி இறங்க வேண்டும்.
இதில் நடக்கும் பிரச்சனைகள் தான் மாதவிடாய் சுழற்சி கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மெனார்க் மற்றும் பூப்பெய்துதல் குறித்து. டீன் ஏஜ் இளையோர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.
ஒரு பெண் பூப்பெய்து விட்டால், அவளிடம் பாதுகாப்பற்ற முறையில் (ஆணுறை உள்ளிட்ட கர்ப்பத்தடை உபகரணங்கள் அணியாமல்) உடலுறவு கொண்டால் (அதாவது ஆணின் இனப்பெருக்க உறுப்பான பீனிஸ் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பான வெஜைனாவில் விந்தணுக்களை செலுத்தினால்) கர்ப்பமடையும் வாய்ப்பு அதிகம்.
பாதுகாப்பற்ற உடலுறவினால் பால்வினை நோய்கள் பரவும் வாய்ப்பும் அதிகம். டீன் ஏஜ் வயதில் கர்ப்பமடைவது என்பது உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தானது. பெண்ணின் திருமண வயது 18. ஆணின் திருமண வயது 21 என்று சட்டம் நிர்வகித்திருத்திருப்பது ஆணும் பெண்ணும் இந்த வயதுகளுக்குப் பிறகு உடலுறவில் ஈடுபடும் போது பிரசவம் சார்ந்த, கர்ப்பம் சார்ந்த சிக்கல்கள் குறையும்.
குறிப்பாக குழந்தைக்கு சட்டப்பாதுகாப்பும் கிடைக்கும் என்பதற்காகவும் தான் என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
பூப்பெய்துதல், இயற்கையான நிகழ்வு, மாதவிடாய், இயல்பான சுழற்சி, இதில் பீதியடையவோ பேரதிர்ச்சி கொள்ளவோ ஒன்றும் இல்லை என்பதை அறிந்து செயல்படுவோம்.
















Comments
Post a Comment